திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் (30). வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது. தெரிய வந்தது. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்தக் கறைகள் ஏதுமில்லாத நிலையில் வேறு எங்கோ கொலை செய்து விட்டு மருத்துவமனையில் பயன்படுத்துவது போன்று பச்சை நிற படுக்கை விரிப்பால் சடலத்தை சுற்றி கொண்டு வந்து வீசி சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தை கண்டறியும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர் பற்றிய விவரங்களை சேகரித்து ஏதேனும் புகார் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலம் கண்டெடுத்த இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















