திருவள்ளூர்: தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அமாவாசையை முன்னிட்டு தமது குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே உள்ள கருப்பசாமி கோவிலுக்கு வந்துள்ளார். மீஞ்சூர் பஜார் பகுதியில் வந்த போது ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 2குழந்தைகள் உட்பட 6பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையில் ஆட்டோ கவிழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்கிறது. அப்போது பின்னால் வந்த 2 ஆட்டோக்கள் சுதாரித்து நிறுத்துவதால் அசம்பாவிதம் தவிர்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் வெளியே வந்ததும் பொதுமக்கள் ஓடி வந்து மீட்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ சாலையில் கவிழ்ந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு