திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி கொடிக்கால் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனபால் (வயது 23). என்பது தெரியவந்தது.
ஊர் பொதுமக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோருடன் கடந்த திங்கட்கிழமை பழனிக்கு பாதயாத்திரையாக கிளம்பி வந்துள்ளனர். இந்நிலையில் விருப்பாட்சி வந்த இளைஞர்கள் ஏராளமானோர் மேல் தலையூற்று அருவிக்கு சென்றுள்ளனர். காலையில் சென்ற அவர்கள் மதியம் வரை குளித்து விட்டு கீழே வந்தனர். ஆனால் தனபால் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இச்சம்பவம் தெரியாமல் இளைஞர்கள் பழனிக்கு சென்று விட்டனர்.
அங்கு சென்றபின் தனபால் இல்லாததை அறிந்த அவர்கள் பழனி நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் மேல் தலையூற்று அருவியில் தனபால் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தனபாலுடன் சென்ற இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா