சென்னை : சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (22), இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தந்தையை காண சென்றார். இதற்கிடையே அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரையடுத்து, பூக்கடை காவல் துணை ஆணையர் திரு.மகேஸ்வரன், மற்றும் காவல் உதவி ஆணையர் திரு. பாலகிருஷ்ண பிரபு, ஆகியோரின் உத்தரவின் பேரில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர்கள் திருமதி. ஜெயலட்சுமி, மற்றும் திரு. சித்தார், தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவுகளை கொண்டு திருடனை காவல் துறையினர், தேடி வந்தனர். இந்த நிலையில் யில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் மீண்டும் அடுத்த நாள் மருத்துவமனை வளாகத்தில், சுற்றி திரிந்ததை காவல் துறையினர், கவனித்தனர்.
இதையடுத்து அவரையும், அவருடன் வந்த மற்றொரு நபரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (28), மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசாருதீன் (28), என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு நடந்த விசாரணையில், இவர்களின் கூட்டாளிகளான எழில்நகரை சேர்ந்த பயாஸ் (29), மாதவரத்தை சேர்ந்த ராஜசேகர் (28), மற்றும் அஜித் (28), ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் சென்னையில், உள்ள பல இடங்களில், தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், வெவ்வேறு இடங்களில், திருடப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களை, விசாரித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.