மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சரவணகுமார் வாசுகி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3 பெண் குழந்தைகளும் ஏழாம் வகுப்பு நான்காம் வகுப்பு ஒன்றாம் வகுப்பு
என சோழவந்தான் கருப்பட்டி சாலையில் உள்ள விவேகானந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். சரவணகுமார் லோடுமேன் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவியான வாசுகி மூன்று பெண் குழந்தைகளையும் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள தனியார் பள்ளிக்கு தினசரி காலை தனத ஸ்கூட்டியில் அழைத்து சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் நான்காம் வகுப்பு படித்த ஜனா ஸ்ரீ யை பள்ளியிலிருந்து தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சோழவந்தான் பேட்டை பகுதியில் வரும்போது கருப்பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் சென்ற 29 கே என் கொண்ட அரசு பேருந்து ஸ்கூட்டியின் பின்னால் மோதியதாக தெரிகிறது.
இதில் பின்னால் அமர்ந்து வந்த ஜனா ஸ்ரீ தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் பட்டு சுயநினைவு இழந்துள்ளார். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஜனா ஸ்ரீ மற்றும் அவரது தாயார் வாசுகி ஆகிய இருவரையும் அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜனா ஸ்ரீ ஐ பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார் இதனை அடுத்து பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தப்பி ஓடிய நிலையில் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்றனர். இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் ஸ்கூட்டியின் பின்பகுதியில் அமர்ந்து வந்த சிறுமி ஜனா ஸ்ரீ தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகவும்
மேலும் மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கூலி வேலை செய்யும் சரவணக்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஓட்டுனரின் கவன குறைவால் சோழவந்தான் திருவேடகம் பள்ளிவாசல் அருகில் வைகை ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருந்தனர் இந்த நிலையில் தொடர்ந்து அரசு பேருந்து விபத்தை ஏற்படுத்தியதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியான சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார். போக்குவரத்து துறையில் உள்ள பராமரிக்கப்படாத பேருந்துகளால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவதால் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனி மேலாவது பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து பணிமனைகளில் உள்ள காலியிடங்களை நிரந்தர பணியாளர்கள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கூறுகின்றனர். அரசு பேருந்து மோதியதில் பல்வேறு கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியான ஜனா ஸ்ரீ உயிரிழந்த நிகழ்வு அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி