திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பியது. நேற்று இரவு முதல் விடிய விடிய பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக வாகனங்களில் செல்வோர் சற்று அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் அரசு பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி ஒரு சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது.
இதனால் பேருந்தில் இருந்த 8 பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். பேருந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் சிக்கி ஒரு சக்கரம் ஒருபுறம் வயல்வெளியில் மறுபுறம் சாலையிலும் என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து காவல்துறை மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு