விருதுநகர் : சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு, நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநிலத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கருத்தரங்கில், திருத்தங்கல் காவல்நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசபாண்டியன் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கில் போக்குவரத்து அலுவலர் குமரவேல் பேசும்போது, பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக் கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது மிதமான வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லக் கூடாது. சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிகளை மதிப்போம் என்று மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி இருக்க வேண்டும் என்று பேசினார். பள்ளி முதுகலை ஆசிரியர் மலைக்கனி நன்றி கூறினார்.
:
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி