விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணபேரி பகுதியில் உள்ள, வீரமா முனிவர் உயர்நிலைப் பள்ளியில், போதை எதிர்ப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் துரை வரவேற்றார். சிவகாசி கல்வி மாவட்ட பள்ளி கல்வி துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, நல்லவைகள் இருக்கும் போது கெட்டவைகளை தேடக்கூடாது. உடலையும், மனதையும் கெடுக்கும் போதை பொருட்களை பற்றிய சிந்தனை கூட மாணவர்களுக்கு வரக்கூடாது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் சிந்தனை கற்பதில் மட்டுமே இருந்தால் தான் உயர் லட்சியங்களை அடைய முடியும் என்று பேசினார். கருத்தரங்கில் மல்லி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தங்கவேல் பேசும்போது, சாலையில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். விபத்துகளை தவிர்ப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். மாணவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் ரங்கசாமி தலைமையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி