திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் புத்தாண்டு மற்றும் பொங்கல் தினங்களில் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் கடலில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்தனர். இதில் சிலரை அப்பகுதி மீனவ இளைஞர்கள் மரண விளிம்பில் இருந்து மீட்டனர்.மேலும் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளில் அரசுத் துறையில் சேர்ந்த காவல்துறை, வருவாய்த்துறை,வனத்துறை அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்களும் மீனவ கிராம இளைஞர்களும் ஈடுபட்டனர். குறிப்பாக காணும் பொங்கல் தினத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றியதின் விளைவாக எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இதனை பாராட்டும் வகையில் பழவேற்காடு அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தில் உள்ள தியான மண்டபத்தில் இதற்கான பாராட்டு விழா நடைபெற்றது.
ஆலய அறங்காவலர் பழனியப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழவேற்காடு கடற்கரையில் வருங்காலங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காகவும் உயிரை துச்சமாக மதித்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதற்காகவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கான பணியில் ஈடுபட்டவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.மேலும் வேர்ல்ட் வைட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 2 வயது குழந்தை தருணுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் காளிராஜ், பழவேற்காடு வன அலுவலர் நரசிம்மன் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் ஆகியோர் கலந்து கொண்டு இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அரசுத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவ இளைஞர்களுக்கு மரியாதை செய்து பதக்கங்களை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் நிகழ்ச்சி தொகுத்தார். பழவேற்காடு பகுதியில் பணியாற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு