திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பாபுவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ3 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு திண்டுக்கல் நத்தம் சாலையில் ரூ 20 லட்சம் முன் பணம் கொடுத்துள்ளார். மீண்டும் மீதி பணத்தை கேட்டு மிரட்டியதால் சுரேஷ்பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து திண்டுக்கல் தோமையார்புரம் அருகே மருத்துவரிடம் ரசாயனம் தடவிய ரூ31 லட்சத்தை அங்கீத் திவாரி வாங்கிய போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதன் எதிரொலியாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி