திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடியை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காலை அங்கன்வாடி பணியாளர் வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடைத்துள்ளன. கடந்த 20நாட்களுக்கு முன் இதே அங்கன்வாடியின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சமையல் கேஸ் சிலிண்டரை திருடி சென்றுள்ளனர். 2வது முறையாக மீண்டும் அதே அங்கன்வாடியை உடைத்து மீண்டும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதே கிராமத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். கோவில் பூட்டினை உடைக்க முடியாததால் ஜன்னல் வழியே உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை அள்ளி சென்றுள்ளனர். மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் கண்ணாடியை உடைத்தும் திருட முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசூர், சிற்றரசூர் கிராமங்களில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு