விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 பேரை, திடீரென்று இடமாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், தனிப்படை போலீசாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மற்றும் காவல் உட்கோட்ட அளவிலும் தனிப்படை பிரிவில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 21 பேர் மாவட்டத்தின் உட்பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் இருந்த பணியிடங்களில், காலியாக இருக்கும் பணியிடங்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 17 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் ஒவ்வொருவரும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மற்றும் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், அந்தப்பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் தனிப்பிரிவிற்கும் உரிய தகவல்களை விரைவாக அனுப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி