மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த 01.08.23-ம் தேதி மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய சரகத்தில் உள்ள அழகர்கோவில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சந்தேகத்திற்குட்பட்ட வகையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வலையபட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வந்தது.
மேற்படி குற்றச்சம்பவம் நடைபெற்ற 6 நாட்களுக்குள் குற்றவாளியை கண்டறிந்து சம்மந்தப்பட்ட எதிரி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கருப்பையாவை கைது செய்து அவரிடமிருந்து வழக்கின் சொத்துக்களான இறந்த நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 39 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10,000/- பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதோடு அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி குற்றவாளி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வருகிறது.
இந்நிலையில் குற்றச்சம்பவம் நடைபெற்ற 6 நாட்களுக்குள் சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள பல்வேறு CCTV Camera-க்களை ஆராய்ந்து, அதில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், இவ்வழக்கில் கொலையுண்ட பெண்மணி அடையாளம் காணப்படாமல் இருந்து வருகிறது. அப்பெண்மணியை அடையாளம் காண்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்