சென்னை : கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் அவரது இருச்ககர வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை சிறிது சிறிதாக நகர்த்தச் சொல்லி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தே சென்று 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல உதவினார்.
முகமது அலி ஜின்னா பாரிமுனை IDFC தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருவதும், சமூக சேவகர் என்பதும், கடந்த 8 ஆண்டுகளாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 02.00 மணி வரையில் அவசர சிகிச்சை பிரிவில் விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதும் தெரியவந்தது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் முகமது அலி ஜின்னாவை இன்று நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி வெகுமதி வழங்கினார்.