கும்பகோணம், பிப்.12-
தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி தஞ்சை தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், தலைமை காவலர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது.
அதில்
தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு ரவுடி கோஷ்டிகளுக்குள் முன் விரோதம் காரணமாக மோதல் நடைபெற்றதாகவும், அச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் பயங்கரமான ஆயுதங்களுடன் சில நாட்களாக பர்மா காலனி அருகில் மறைந்து இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தஞ்சை தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று அப்பகுதிக்கு சென்று அங்குள்ள கருவமரக் காட்டில் மறைந்திருந்த தஞ்சாவூர் , அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வரும் குமார் மகன் சூர்யா (24) தஞ்சாவூர் பாரதிதாசன் நகர் பர்மா காலனியில் வசித்து வரும் முத்துசாமி மகன் தமிழ்வாணன் (22) ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த மூன்று பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதில் முன் விரோதம் காரணமாக முன்பு நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய ரவுடியை கொலை செய்ய இவர்கள் சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
மேலும் இந்த சதி திட்டத்தில் இன்னும் வேறு நபர்களின் தொடர்பு உள்ளதா என தஞ்சை தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்