திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 02.02.2022 அன்று அனவன்குடியிருப்பை சேர்ந்த பால்ராஜ்(38),என்பவரும் அவரது உறவினர் இராமகிருஷ்ணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பால்ராஜை தாக்கியும், பின்னால் அமர்ந்து வந்த இராமகிருஷ்ணன் மீது மிளகாய் பொடியை தூவி செல்போனை பறித்துக்கொண்டு பால்ராஜை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து பால்ராஜ் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு அவர்கள், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்சிஸ், அவர்கள் மற்றும் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி, அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து சம்பவ இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து சந்தேகப்படும்படியான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து முக்கூடலை சேர்ந்த இமானுவேல் ஞான பிரவீன்(19), என்பவரை விசாரணை செய்ததில் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேற்படி காவல்துறை விசாரணையில் அடைச்சாணியை சேர்ந்த தலையாரி முத்துக்குமார்(32) என்பவரை பற்றி மேற்படி பால்ராஜ் அடிக்கடி RTI மூலம் தகவல் கேட்டதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் முத்துக்குமார் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான முத்துக்குமார், அம்பை ஊர்க்காடை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40), நத்தன்தட்டையை சேர்ந்த கதிர்வேல் (27), முக்கூடலை சேர்ந்த இம்மானுவேல் ஞான பிரவீன்(19), சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த சுபிஷ் @ சுரேஷ், பத்தல்மேடை சேர்ந்த வேல்துரை @ பார்த்திபன் (26), மற்றும் பாப்பாகுடியைச் சேர்ந்த மகேஷ்(31) ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.