மதுரை : மதுரைமாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம், சீர்நாயக்கன்பட்டி, அ.வெல்லோடு கரட்டழகன்பட்டி, பெரியசாமி மகன் நடராஜன் என்பவர் கடந்த (10.01.2023),-ம் தேதி தனது ஆட்களுடன் பசுபதி பாண்டியன் நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்வுக்குச் சென்றவர் கூடக்கோவில் காவல் நிலைய சரகம் பாரபத்தி சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்ததுடன் பயங்கர ஆயுதங்களுடன் சட்டவிரோதமாகக்கூடி சுங்கச்சாவடி ஊழியர்களை அவதுாறாக பேசி தாக்கிக் கொலைமிரட்டல் விட்டதுடன் அங்கிருந்த பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதன் காரணமாக கூடக்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மேற்படி குற்றவாளி நடராஜன் என்பவர் மீது திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தல் போன்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இவ்வாறு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மேற்படி நபர் மீது குண்டர்தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் சிபாரிசு செய்ததின்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் (25.01.2023),-ம் தேதி மேற்படி நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மதுரை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்