திருவாரூர்: (26.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், வண்டாம்பாளை, விவேகானந்தம் வித்யாஷ்ரமம் (CBSE) பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும், நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும், உயர்ந்த குறிக்கோளை மனதில் நினைத்து கொண்டு அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்கள். அறிவே சிறந்த மூலதனம். அறிவை வளர்த்து கொள்ள முன்னோர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் எழுதிய புத்தகங்களை அதிக அளவில் வாசிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறிது நேரம் மனம் விட்டு பேசுவதால் அவர்களின் நிறை, குறைகளை அறியலாம் என்றும் கூறினார்கள்.
தற்போது குழந்தைகள் கைப்பேசி, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை இழக்கின்றனர். பெற்றோர் குழந்தைகள் கைபேசி பயன்படுத்தும் போது கண்காணிக்க வேண்டும், நாளைய தலைமுறையினர் சிறந்து விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது Seat Belt அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.