திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம், இன்று (09.03.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்கள். கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வருவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடர்ந்து தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் அதிக அளவில் காவலர்களை ஈடுப்படுத்த வேண்டும் என்றும், தற்போது குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் வதந்திகள் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புவோர் மீது உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.