தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், இங்கிருந்து போதைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி திரு.ஜெயக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்து போதைப்பொருள் கும்பலை பிடிக்க எஸ்.பி திரு.ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வந்தனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொல்ல, அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் புழக்கத்துக்காக வைத்திருந்த 162 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான அந்தோணி முத்து, பிரேம் என்ற பிரேம் சிங், கசாலி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி திரு.ஜெயக்குமார், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ஹெராயினை விற்பனை செய்த அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான், அந்தோணி முத்து, கசாலி, பிரேம் என்ற பிரேம் சிங் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கிலோ கணக்கிலான ஹெராயின் மீனவர்களுக்கு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தினோம்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மீனவர் அந்தோணி முத்து தன் சகாக்களான பிரேம் என்ற பிரேம் சிங், கசாலி ஆகியோருடன் தங்கு கடல் மீன்பிடிப்புக்காக அரபிக்கடலின் மினிகாய்தீவுப் பகுதியில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்போது, கடலில் மிதந்து வந்த ஒரு பார்சலை மீட்டு எடுத்து தருவைகுளத்திலுள்ள அந்தோணி முத்துவின் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். பார்சலில் பவுடர் போன்று இருந்த ஹெராயினை என்னவென்றே தெரியாமல் அதை வீட்டிலேயே பாதுகாத்து வந்திருக்கின்றனர்.
பிறகு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் சிறு,சிறு பாக்கெட்டுகளில் அடைத்து புழக்கத்துக்காக கொடுத்திருக்கின்றனர். இவ்வாறாக 30 பாக்கெட்டுகள் போடப்பட்டதில் 3 பாக்கெட்டுகளை பரிசோதனை முறையில் பல்வேறு நபர்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.
இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு அவர்கள் கடலிலிருந்து மீட்டெடுத்து வந்தது ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரிய வந்திருக்கிறது. அதன் சர்வதேச மதிப்பை தெரிந்துகொண்டவர்கள், ஹெராயினை சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விற்க முடிவுசெய்தனர்.
இதற்காக, தான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த பாக்கெட்டுகளிலிருந்து 6 பாக்கெட்டுகளை தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஏஜென்ட் முருகன் என்பவர் மூலமாக தலா 1 பாக்கெட்டை ரூ.1 முதல் 1.50 லட்சம் வரை விற்பனை செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், டூவிபுரம் பகுதியில் இம்ரான்கான், அன்சார் அலி, மாரிமுத்து ஆகிய மூவரையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 162 கிராம் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் முருகன் என்பவர் தலைமறைவாகிவிட்டார் அவரை தேடி வருகிறோம்” என்றார்.
அதிக அளவில் போதைப்பொருள் பிடிபட்டிருப்பதால் மதுரையிலிருந்து போதைப்பொருள் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி விரைந்திருக்கின்றனர்.
இந்த ஓராண்டில் தற்போது வரை தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் ஈடுபட்ட 22 பேர் உட்பட இதுவரை 195 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 21 கிலோ ஹெராயின் சிக்கிய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.