தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் அதிரடியாக களமிறங்கிய CBCID காவல்துறையினர், யாரும் எதிர்பாராத வகையில் கொலை வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு, உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் இருவர் தலைமறைவாகினர். இதற்கிடையே மற்ற 3 பேரும் இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று, சிபி சிஐடி சங்கர், அதிகாரிகளுக்கு கெடு விதித்தார்.
இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் வீடுகளுக்கு நள்ளிரவில் சிபிசிஐடி காவல்துறையினர் சென்று, அவர்கள் 3 பேரையும் அவர்கள் கூறும் இடத்திற்கு வரவழைத்து உள்ளனர். முதலில் இதற்கு தயங்கிய மூன்று பேரையும் தங்கள் பாணியில் கவனித்து வரவழைத்த போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள், 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் வேட்டையாடி உள்ளதாக கூறலாம். இந்த வழக்கில் கைது நடவடிக்கை இருக்காது, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவது போல் நடத்தி விட்டு கடந்து சென்று விடுவர் என்று பலரும் நினைத்தனர். ஆனால் சிபிசிஐடி சங்கர் தலைமையிலான தனிப்படையினர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
அத்தோடு இல்லாமல் நேற்று சிபிசிஐடி ஐஜி திரு.சங்கர் அவர்கள், உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
CBCID IG திரு.சங்கர் கைது நடவடிக்கை குறித்து கூறுகையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருதாகவும், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கை தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி போலீசார் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.