கோவை : சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் விளம்பர பேனர் வைக்கும் ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். கருமத்தம்பட்டி பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தெக்கலூரில் உள்ள விவசாய நிலத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் தனியார் நிறுவனத்திற்கு 80 அடி உயர விளம்பரப் பலகை வைப்பதற்காக ராமசாமி மற்றும் பாலாஜி இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் பாலாஜி 80 அடி உயர விளம்பர பலகையை மேற்கண்ட இடத்தில் நிறுவுவதற்காக பழனிச்சாமியிடம் தெரிவிக்க அவர் 6 வேலையாட்களுடன் மேற்படி இடத்தில் 80 அடி உயர விளம்பர பலகை வைப்பதற்காக எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்துள்ளனர். இந்நிலையில் செந்தில் முருகன் (38), குமார் (52), குணசேகரன் (52), மற்றும் சேட் (23) ஆகியோர் உயரே நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது மழை பெய்து பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பிகள் சரிந்து உயரே நின்று வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் கீழே விழுந்ததில் செந்தில் முருகன் (38), குமார் (52), குணசேகரன் (52), ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபரான சேட் (23) பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேற்படி விபத்து குறித்து இவர்களுடன் வேலை செய்த அருண்குமார் (26) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விளம்பர ஒப்பந்ததாரர் பாலாஜி, ஒப்பந்ததாரர் பழனிச்சாமி, மேலாளர் அருண்குமார் மற்றும் இட உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் விபத்து ஏற்பட காரணமாக இருந்த சேலம் இளவரசன் மகன் அருண்குமார்(27) மற்றும் குப்புசாமி மகன் பழனிச்சாமி(56) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்