சென்னை : சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல டயர் தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கன்டைனரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டைனர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலில் ஏற்றப்பட்ட 1500 டயர்கள் அடங்கிய கண்டைனர் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டில் பரிசோதித்த போது அதில் டயர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக டயர் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டயர்களை ஏற்றுமதி செய்த முகவர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்ததில் லாரி தேவையின்றி பல்வேறு இடங்களில் நின்று தாமதமாக காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் சார்பில் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கன்டைனரில் 8.29லட்ச ரூபாய் மதிப்பிலான 495டயர்கள் திருடு போனது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கன்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து நடத்திய விசாரணையில் துறைமுகத்திற்கு செல்வதற்கு முன்பாக வழியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து லாரியில் இருந்து சுங்கத்துறை சீலை அகற்றாமல் நூதன முறையில் டயர்களை திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து மணலியை சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரை சேர்ந்த கூட்டாளி இளமாறன் (30) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். டயர் திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும், மீஞ்சூர் குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே திருடு போன டயர்கள் மீட்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு