சென்னை: ஆயுதப்படை பெண் காவலர் திருமதி.L.லஷ்மி என்பவர் கடந்த 26.7.2021 அன்று காலை பணிக்கு செல்வதற்காக சைதாப்பேட்டையில் இருந்து இரயிலில் சென்றபோது, அந்த ரெயில் பெட்டியில் சுமார் 7 வயது சிறுமி அழுது கொண்டிருந்ததால், பெண் காவலர் லஷ்மி சிறுமியிடம் விசாரித்தபோது,
சிறுமி அவரது தங்கை மற்றும் பாட்டியுடன் இரயிலில் வந்தபோது, பாட்டியையும் தங்கையும் தவறவிட்டதாக தெரிவித்தார். உடனே, பெண் காவலர் லஷ்மி அந்த சிறுமியை மாம்பலம் இரயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமி, அவரது பாட்டி மற்றும் தங்கையுடன் தாம்பரத்தில் இருந்து பூங்கா இரயில் நிலையம் செல்ல இரயிலில் ஏறியதும், பின்னர் பாட்டியை காணாமல் சிறுமி இரயிலில் அழுது கொண்டிருந்ததும்,
இதையறியாமல் சிறுமியின் பாட்டி, பூங்கா இரயில் நிலையம் இறங்கி சிறுமியை தேடியதும் தெரியவந்தது . அதன்பேரில் சிறுமியின் பாட்டி மற்றும் பெற்றோரை மாம்பலம் இரயில் நிலையம் வரவழைத்து, சிறுமியை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய ஆயுதப்படை பெண் காவலர் திருமதி. L. லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 29.07.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.