பெரம்பலூர்: பெரம்பலூர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4.20 லட்சம் முறைகேடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், கடந்த 2019-20ம் ஆண்டில் கொட்டரை கிராமத்தில் பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் அக்கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் செல்லதுரை, வீரமுத்து மனைவி பெரியம்மாள், மருதமுத்து மனைவி சின்னம்மாள், சுப்ரமணியன் மனைவி செல்வமணி ஆகியோருக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் செல்லதுரை உட்பட 4 பேரும் வீட்டினை கட்டவில்லை. ஆனால் வீடு கட்டியதாக போலி ஆவணம் மூலம் அறிக்கை தயார் செய்து ரூ.4.20 லட்சம் பணத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது. இதில் அப்போதைய ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், ஜூலி, இளநிலை பொறியாளர் ராஜபாபு, பணி மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், மதீனா, ஊராட்சி செயலர் சகுந்தலா ஆகியோர் முறைகேட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் 7 பேர் மீது கிரிமினல், சதி, தவறான பதிவுகளை உருவாக்குதல், போலி ஆவணங்களை உருவாக்குதல், கணக்குகளை பொய்மைப்படுத்துதல், ஆளுமை மூலம் ஏமாற்றப்படுதல் மற்றும் குற்றவியல் தவறான நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சமர்பித்துள்ளார்.
அடுத்த கட்டமாக இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.