வேலூர் : வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ராஜேஷ்கண்ணன், தலைமையில் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும்பொருட்டு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் வேலூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதிகளான பெரிய மாமரத்துக்கொல்லை, சிறிய மாமரத்துக்கொல்லை, குணம்பட்டி ஆகிய இடங்களில் திடீரென அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். அதேபோன்று பீஞ்சமந்தை, சின்னதட்டான்குட்டை, எல்.ஜி.புதூர், குந்தராணி, தேக்குமரத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. இரு இடங்களிலும் நடத்திய சோதனையில் 5,200 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை போலீசார் தீயிட்டு அழித்தனர்.
அதன்பின்னர் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.திருநாவுக்கரசு, தலைமையில் வேலூர் உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையை தடுக்க ரோந்து மற்றும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாராயம் விற்ற மற்றும் வைத்திருந்த எலந்தபூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 33), கே.ஜி.ஏரியூர் கிராமம் தேவராஜ் (25), சின்னப்புதூர் காமராஜ் (44), சேர்ப்பாடி பெரியசாமி (58), நெல்வாய் வினோத்குமார் (35), குடிசை கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் (26), உமாபதி மனைவி விஜயா (57), பிராமணமங்கலத்தை சேர்ந்த சவுந்தராஜன் (56), சதுப்பேரியை சேர்ந்த விஜயன் என்கிற விஜயராஜ் (50), சீனிவாசன் (44), ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்