விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.ஆர்.என் நகரில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம், நகர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கீதா தலைமையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்தப்பகுதியில், இந்திரா நகரைச் சேர்ந்த நவநீதன் என்பவரது குடோனில் போலீசார் சோதனை செய்தனர். குடோனில் 30 குட்கா புகையிலை மூட்டைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆனாலும் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியபோது, குடோன் தரைப்பகுதியில் பதுங்கு அறை அமைக்கப்பட்டு, அங்கு 120 மூட்டை குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பிடிபட்ட 150 மூட்டை குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. புகையிலை மற்றும் குட்கா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த நவநீதனை போலீசார் கைது செய்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்த போலீசார், நவநீதனிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.