தஞ்சை : தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. திருமதி.கயல்விழி உத்தரவிட்டார்.அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் மேற்பார்வையில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கிய சாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.கந்தசாமி, போலீசார் திரு.கண்ணன், திரு.இளையராஜா, திரு.சுந்தரராமன், ஆனந்தராஜ் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சரக்கு வேன் மூலம் குட்கா பொருட்கள் பட்டுக்கோட்டைக்கு கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வேன்களை மறித்து அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த குணாளன், கரிகாலன், பெரமயன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.அவர்கள் 3 பேரும் பெங்களூருவில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக 2 சரக்கு வேன்களில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1¾ கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிராம்பட்டினம் கடைவீதியில் மதுக்கூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதயைடுத்து அவரையும் போலீசார் பிடித்தனர்.பின்னர் பிடி்பட்ட 4 பேரையும் கைது செய்து பட்டுக்கோட்டை தாலுகா மற்றும் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.இதுகுறித்து தஞ்சை பட்டுக்கோட்டை தாலுகா மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்