திண்டுக்கல்: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ரயில் பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மதுபானங்களை கடத்தி வந்த தூத்துக்குடி சாயல் புரத்தைச் சேர்ந்த டிஸா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே ரயில் பெட்டியில் மதுபானம் கடத்தி வந்த அந்தப் பெண்ணுடன் வந்த மேலும் மூன்று பேர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில் கடத்தி வந்த பெண்ணை கைது செய்ததோடு தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா