தஞ்சை : தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்குஅலங்கம், திலகர் திடல், பெரியகோவில் சாலை, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி மற்றும் மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தர வேண்டும் என பலர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில்ஈடுபட்டனர். அதில் தஞ்சையில் காணாமல் போன செல்போன்களை திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, சிலர் இந்த செல்போன்கள் கீழே கிடந்ததாகவும், சிலர் விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இந்த செல்போன்கள் எல்லாம் காணாமல் போனதாக புகார் வரப்பெற்றுள்ளதால் செல்போன்களை ஒப்படைக்கும்படி போலீசாா் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர், நாங்கள் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறோம். எங்களது பணத்தை ஒப்படைத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ளுங்கள் என கூறினர். சிலரோ செல்போன்களை நேரில் வந்தால் ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்தனர். செல்போன்களை ஒப்படைக்க விரும்பியவர்களிடம் போலீசார் நேரில் சென்று செல்போன்களை பெற்று கொண்டனர். மறுப்பு தெரிவித்தவர்களிடம் சட்டம் குறித்து எடுத்து கூறி செல்போன்களை பெற்று வந்தனர். இதன்படி மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கலந்து கொண்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்