கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.பகலவன், IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மூர்த்தி, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
கல்வராயன் மலைப்பகுதியில் கொடுந்துறை, சட்டம்பாறை வெள்ளரிக்காடு மற்றும் தாழ்வெண்ணையூர் ஆகிய கிராமத்திற்கு அருகே உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 24 1/2 பிளாஸ்டிக் பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 4900 லிட்டர் சாராய ஊரல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.