சென்னை: முகக்கவசம் அணியாத 2,898 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 255 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட 11 கடைகள் மூடப்பட்டு, 2,32,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் 31.5.2021 வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 31.5.2021 முதல் 07.6.2021 காலை வரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்குதொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், முறையான முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரியசாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று (02.6.2021) மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 3,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 461 இருசக்கர வாகனங்கள், 21 ஆட்டோக்கள் மற்றும் 4 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 486 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் நேற்று (02.6.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,937 இருசக்கர வாகனங்கள், 72 ஆட்டோக்கள், 27 இலகு ரக வாகனங்கள் மற்றும் 03 இதரவாகனங்கள் என மொத்தம் 2,039 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,898 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 255 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட 11 கடைகள் மூடப்பட்டு ரூ.2,32,800/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.