சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 14.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சோதனைச்சாவடிகள் அமைத்து, சரக காவல் குழுவினர்கள் மூலம் தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மற்றும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணித்து உரிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் (வடக்கு, தெற்கு, போக்குவரத்து) அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு காவல் சார்பில் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல் சார்பில் 118 இடங்களிலும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம் வாகனத் தணிக்கை, சுற்று ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து கொரோனா தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
சென்னை பெருநகரில் நேற்று (15.05.2021) சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கை மற்றும் சோதனையில், போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,933 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,485 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 278 வழக்குகளும், அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 42 கடைகள் மூடி, சீலிடப்பட்டு, உரிமையாளர்களிடம் பணம் ரூ.4,67,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.