சென்னை: தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போட்டிகளை இன்று துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
5 அடுக்கு பாதுகாப்பு சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெறும் நிலையில் இப்போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதனையடுத்து அவர் பங்கேற்கும் இடங்களில் 5 அடக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமார் 22,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.