கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணை தலைவர் சேலம் சரகம் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி அவர்களின் மேற்பார்வையில் 26.12.2021 ஆம் தேதி இரவு சுமார் 12.00 மணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மோகன், திரு.சிவசந்தர் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை NH-7 ல் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது.
அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 6 1/2 டன் எடையுள்ள 300 மூட்டைகள் குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரை கைது செய்து, வாகனத்துடன் குட்கா புகையிலை பொருட்களுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து நான்கு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்த காவல் துறையினருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.