சென்னை: நான்காவது காவல் ஆணையத்தை நேற்று முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.டி.செல்வம் அவர்களை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மனநல மருத்துவர்களை உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டது.
தமிழக வரலாற்றில் இதுவரை மூன்று முறை காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.. இந்த காவல் ஆணையத்தின் முக்கியத்துவம் என்ன? எந்த வகையில் காவலர்களுக்கு அவைகள் பயன்பட்டிருக்கின்றன என்பவைகளை பற்றி காணலாம்.
1)முதல் காவல் ஆணையம் 1969 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களால் அமைக்கப்பட்டது. இதுதான் இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட முதல் காவல் ஆணையம் ஆகும்.
தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரி ஆர்.ஏ.கோபாலசாமி தலைமையில் இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆணையமானது 133 பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதில், 115 பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த பரிந்துரைகளை அடுத்து காவலர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு, காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு, சிறந்து பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அண்ணா பதக்கம், முதல்வர் பதக்கம் உள்ளிட்ட முக்கியமானவைகள் அப்போது அறிமுகம் செய்யப்பட்டன.
2) இரண்டாவது காவல் ஆணையமும் அன்றைய முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களால் 1989-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சபாநாயகம் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையமானது 112 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அந்தப் பரிந்துரைகளில் 96 பரிந்துரைகளை அரசு ஏற்று நிறைவேற்றப்பட்டன.
வயர்லெஸ் கருவிகள், கவலர்களுக்கு குடியிருப்பு, மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட முக்கியமானவைகள் இந்த காவல் ஆணையத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
3) மூன்றாவது காவல் ஆணையமும் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையமானது 444 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.
அதில் 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. 48 பரிந்துரைகள் மீதான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. 146 பரிந்துரைகள் துறைத்தலைவர்களால் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வு மையத்தின் மூலம் நிரப்புவதற்கு டி.ஜி.பிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டன.
இந்த மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரைகளில் கடைநிலை காவலர்களுக்கு எந்த பயனுள்ள அம்சங்களும் இல்லை என்று அப்போது காவலர்களால் குற்றம்சாட்டப்பட்டன.
காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு, ஆர்டர்லி முறைகள் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று காவலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதல் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் 2008 முதல் 2017 வரை 3032 காவலர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
2008 முதல் 2017 வரை 294 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2008 முதல் 2017 வரை 8158 பேர் பணியை விட்டு சென்றுள்ளனர்.
இது உட்பட பொது மக்களுக்கும், காவலர்களுக்கும் இடையேயான நட்புறவு குறைந்துகொண்டே வருகிறது.
இவற்றையெல்லாம் களைய காவலர் நலவாரியம், மற்ற மாநிலங்களில் உள்ளது போல காவலர் நல சங்கம், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பதவி உயர்வு, அதிகப்படியான காவலர்களை நியமித்தல்,
சரியான விடுமுறை கிடைத்தல், எட்டு மணி நேர பணி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக அமைந்துள்ள நான்காவது காவல் ஆணையம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளும், எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது