சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு , தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அதன்பேரில் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் , இ.கா.ப. , அவர்கள் உத்தரவின்பேரில் , சென்னை பெருநகரில் சோதனைச்சாவடிகள் அமைத்து , காவல் குழுவினர்கள் மூலம் தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள் , முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் , சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மற்றும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணித்து உரிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
அதன்பேரில் , கூடுதல் ஆணையாளர்கள் ( வடக்கு , தெற்கு , போக்குவரத்து ) அறிவுரையின்பேரில் , இணை ஆணையாளர்கள் , துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் , சட்டம் ஒழுங்கு காவல் சார்பில் 200 இடங்களிலும் , போக்குவரத்து காவல் சார்பில் 118 இடங்களிலும் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம் வாகனத் தணிக்க, சுற்று ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து கொரோனா தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது .
சென்னை பெருநகரில் நேற்று ( 17.05.2021 ) சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கை மற்றும் சோதனையில் , போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசியதேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய 235 இருசக்கர வாகனங்கள் , 9 ஆட்டோக்கள் , 2 இலகுரக வாகனங்கள் உட்பட மொத்தம் 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு , அபராதம் மொத்தம் பணம் ரூ .6,67,000 / விதிக்கப்பட்டுள்ளது. மேலும் , சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,836 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
மேலும் , முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,619 வழக்குகளும் , சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 392 வழக்குகளும் , அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 49 கடைகள் மூடப்பட்டு, ரூ .8,59,200 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . ஊரடங்கு பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.