சென்னை: ஆந்திராவில் இருந்து வேனில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னையை அடுத்த காரனோடை வாகன சுங்கச்சாவடி அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினார்கள்
அப்போது வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அந்த வேனில் 16 சாக்கு மூட்டைகளில் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சா 369 கிலோ எடை கொண்டதாகும்.வேனில் கடத்தி வந்த கஞ்சாவுக்கு பாதுகாப்பாக பின்னால் காரில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் இந்த கஞ்சாவை வினியோகம் செய்ய திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 7 பேர் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களும் கைதானார்கள்.திருச்சியில் வினியோகம் செய்தது போக மீதி கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
