விழுப்புரம் : விழுப்புரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் நேற்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான வினாடி- வினா, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவைகளை நடத்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அதன்படி, விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு தேவராஜ், தலைமை தாங்கினார். துணை போலீஸ்சூப்பிண்டு வெங்கடேசன் முன்னலை வகித்தார். மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்து கொண்டு மாணவிகளுடன், கலந்துரையாடினார்.
அப்போது, குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் பற்றி மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் போதைப்பொருட்கள் ஒழிப்பு, இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், மாணவர்களுக்கான ஒழுக்க நெறிகள் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்க பட்டது. விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பா, தனிபிரிவு இன்ஸ்பெக்டர் தங்க குருநதாதன் கலந்து கொண்டனர். 34 போலீஸ் நிலையங்கள் இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 4 மகளிர் போலீஸ் நிலையங்களில் நேற்று மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டு குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் பற்றி மாணவ- மாணவிகளிடம் விளக்கி கூறியதோடு போலீஸ் நிலையங்களில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் போதைப்பொருட்கள் ஒழிப்பு, இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள், விளைவுகள், பஸ்சின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகள், மாணவர்களுக்கான ஒழுக்க நெறிகள் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆரோவில் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுபோன்ற கலந்துரையாடல் மூலம் மாணவர்களுக்கு போலீஸ் நிலையம் தொடர்பான புரிதல் ஏற்படும். போலீசார், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்லுறவு மேம்படும். அதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் அவை தொடர்பான தகவல் தாமதமின்றி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க பேருதவியாக இருக்கும் என்றனர்.