கோவை: கோவையில், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் மூலம், 31 சிறார் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களை மீட்கும், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் பிப்.,1ம் தேதி துவங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினர்.
இதில், 31 சிறார் மீட்கப்பட்டனர்.மாவட்ட குழந்தைகள்பாதுகாப்புத்துறை அலுவலர் சுந்தர் கூறுகையில், ” ஓட்டல், மெக்கானிக் ஷாப், கடைகளில் பணிபுரிந்தவர்கள், பேருந்து, ரயில்நிலையங்களில் பிச்சை எடுத்தோர் என, 14 முதல் 18 வயதுக்குள்ளான 31 சிறார் மீட்கப்பட்டுள்ளனர். ”இவர்களில், 28 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். மீட்கப்பட்டவர்கள், குழந்தைகள் நலக்குழு வாயிலாக, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார். தொடர்ந்து இதுபோன்ற குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க கூடியவர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆபரேசன் ஸ்மைல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அனைத்து குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்