கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர சுவாமிகள் 45. இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். அத்துடன் அவர் சாமி சிலைகளையும் செய்து விற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய வீட்டில் 300 கிலோ எடை கொண்ட முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.சந்திரசேகர் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று பாஸ்கர சுவாமிகள் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 3 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது. 300 கிலோ சிலை இந்த சோதனையின்போது 4 அடி உயரம் கொண்ட 300 கிலோ எடை கொண்ட முருகர் சிலை மற்றும் சிலையை வைக்க பயன்படுத்தும் திருவாச்சி ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த சிலையை மீட்டனர். கோவை காந்திபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனர். விசாரணை இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .