இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்தவிருந்த 3.5 கிலோ கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் திருமதி. விஜயலட்சுமி தலைமையிலான ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை சிலர் வாங்கி வந்து பைக்கில் சென்று விற்பனை செய்கின்றனர். அது மட்டுமின்றி ரயிலிலும் கேரளா மாநிலத்திற்கு கஞ்சா கடத்துவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.விஜயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தன், திரு. ராமகிருஷ்ணன், ஏட்டுகள் நந்தகுமார் மற்றும் பாபு ஆகியோர் நேற்று அதிகாலை அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.15 மணிக்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இன்ஜின் பகுதியில் இருந்து முதலாவதாக உள்ள முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் கழிவறைக்கு பக்கத்தில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த சூட்கேசை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 பார்சல்களில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பதும் அவற்றை கேரளாவுக்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சூட்கேஸ் கிடந்த இடத்தின் அருகில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சாவை வேலூரில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திரு.மோகனிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட திருப்பூர் வாலிபரின் அடையாள அட்டையை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்