தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் “குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு” (Global World Record) சார்பாக நடத்தப்பட்ட 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டு சாதனை நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியாளர்கள் 100 பேருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலவன் வித்யாலயா பள்ளி வளாகத்தில் இன்று (27.02.2022) குளோபல் வேர்ல்டு ரெகார்டு என்ற அமைப்பின் சார்பாக (Global World Record) சார்பாக “வீரகலை சிலம்பம் விருது 2022 மற்றும் மெகா வேர்ல்டு ரெக்கார்டு விருதுக்கான” (Veerakalai Silambam Award 2022 & GWR Mega World Record 2022) 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் விளையாடக்கூடிய சாதனை நிகழச்சி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 1100 மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலம்ப பயிற்சியாளர்கள் 100 பேருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் விளையாடுவது என்பது ஒரு பெரிய சாதனை. இது மிகவும் பெருமைபடக்கூடியதாகும். இந்த சிலம்ப விளையாட்டு என்பது ஒரு பாராம்பரிய தற்காப்புக்கலையாகும், இதை தற்போது பெரும்பாலானோர் அதிக அளவில் பயின்று சாதனை படைத்து வருகின்றனர்.
சிலம்பம் விளையாடுவது மூலம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியமும், மன வலிமையையும் ஏற்படுகிறது. இது போன்ற சாதனை நிகழ்ச்சிகள் மூலம் இந்த கலையை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும், மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை புரிந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை குளோபல் வேர்ல்டு ரெகார்டு இயக்குநர் பரிநிதலிங்கம் அவர்கள் தலைமையில் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பேட்ரிக், வேலவன் வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி.ராஜ்அனிதா உட்பட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.மரிய இருதயம், திரு.பால்மணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.