விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருமதி.ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.கவியரசன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார் பின்னர் அந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்ததில் அந்த லாரியினுள் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் குட்டகம் பகுதியை சேர்ந்த விஜி என்பதும் தெரியவந்தது. 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.