தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்பூர் ரோடு, ஓசனூத்து ரோடு ஜங்ஷன் பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 சி.சி.டிவி கேமராக்களை இன்று (06.01.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது. இந்த புறக்காவல் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
மேலும் தற்போது சி.சி.டிவி காலத்தின் கட்டாயமாக உள்ளது. சி.சி.டிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம், மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வரவேண்டும்.
மேலும் தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
பின்னர் இந்த புறக்காவல் நிலைய பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இருந்தவர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சித்ரகலா மற்றும் போலீசார் செய்திருந்தனர். இவ்விழாவில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துராமன், உதவி ஆய்வாளர் திரு.சீதாராம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.எபனேசர், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் திரு.சிதம்பரம், ஊர்பொதுமக்கள் திரு.முத்துராஜ், திரு.கணபதிராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.