தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை. கடந்த 03.12.2022 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் திரேஸ்நகர் பகுதியில் வைத்து தருவைக்குளம் பகுதியை சேர்ந்த தாசன் மகன் அமல்ராஜ் (29), என்பவரை முன்விரோதம் காரணமாக செங்கலால் தாக்கி கொலை செய்த வழக்கில் தாளமுத்துநகர் டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (24), மற்றும் சிலரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான செண்பகராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்களும், கடந்த (12.12.2022) அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் திருமாஜிநகர் பகுதியை சேர்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் (எ) அப்துல்லா (32) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கன்னிதாய் (எ) ஆயிஷா (27), என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த வழக்கில் மேற்படி இம்மானுவேல் (எ) அப்துல்லாவை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான இம்மானுவேல் (எ) அப்துல்லா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயசீலன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தாளமுத்துநகர் டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் 1) செண்பகராஜ் மற்றும் முத்தையாபுரம் திருமாஜிநகர் பகுதியை சேர்ந்த ஜான்ராஜ் மகன் 2) இம்மானுவேல் (எ) அப்துல்லா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 எதிரிகள் உட்பட 270 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.