தூத்துக்குடி : (30.11.2022), அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா பகுதியில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன் பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லகண்ணு மகன் பழனிக்குமார் (39) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த (02.12.2022) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகண்ணுபுரம் பகுதியில் வைத்து தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவரை மதுஅருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்குகளின் முக்கியகுற்றவாளிகளான பழனிக்குமார் மற்றும் மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் அவர்களும், கடந்த (29.11.2022) அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வைத்து ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டை வாசல் தெருவை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (30) என்பவரது செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஆழ்வார்திருநகரி மாதங்கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (எ) கட்டமாரி (27) மற்றும் சிலரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான மாரிமுத்து (எ) கட்டமாரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லகண்ணு மகன் 1) பழனிக்குமார், தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியை சேர்ந்த திருமணி மகன் 2) மாரிமுத்து மற்றும் ஆழ்வார்திருநகரி மாதங்கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் 3) மாரிமுத்து (எ) கட்டமாரி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 குற்றவாளிகள் உட்பட 268 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.