தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 265 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.
கடந்த 24.11.2022 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கநாயக்கன்பட்டி பகுதியில் வைத்து, அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவரான அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த மாடசாமி மகன் அய்யாத்துரை 67. என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித் 27. என்பவரை புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான ரஞ்சித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முத்துராமன் அவர்களும், கடந்த 26.11.2022 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜெபராஜ் 28. என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெபராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த மாடசாமி மகன் 1) ரஞ்சித் மற்றும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் 2) ஜெபராஜ் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 குற்றவாளிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 குற்றவாளிகள் உட்பட 265 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.