திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூரில் முசிறி திருச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த துணை சூப்பிரண்டு யாஸ்மின் இது பற்றி துறையூர், புலிவலம், மண்ணச்சநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு ‘மைக்’ மூலம் தகவல் தெரிவித்து, காரை மறித்து நிறுத்தும்படி அறிவுறுத்தினார். போலீசார் மீது மோதுவது போல் இந்த தகவலையடுத்து புலிவலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு விஜயகுமார், ஆகியோர் பெரமங்கலம் வேகத்தடை அருகே வந்த அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் காரை போலீசார் மீது மோதுவது போல் அதிவேகமாக ஓட்டிச் சென்றார். இதைக்கண்ட அவர்கள் விலகிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள நொச்சியம் அருகே சென்றபோது அங்கு போலீசார் இருந்ததை கண்ட டிரைவர், காரை பின்னோக்கி எடுத்து மண்ணச்சநல்லூரில் இருந்து எதுமலை செல்லும் சாலையில் ஓட்டிச்சென்றார். அப்போது பின்னால், போலீசார் வாகனத்தில் துரத்தி வருவதைக் கண்ட டிரைவர், ராசாம்பாளையம் அருகே காரை நிறுத்தினார். இதையடுத்து டிரைவரும், காரில் இருந்த மற்றொரு நபரும் காரில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே போலீஸ் வாகனத்தில் அங்கு வந்த காவல்துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும், நீளமான ஒரு கடப்பாரை இருந்ததும் தெரியவந்தது.
இது பற்றி துணை சூப்பிரண்டு யாஸ்மினுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின்படி புகையிலை பொருட்கள், கடப்பாரை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 57 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அரசியல் புள்ளி யார்? இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்பட்டது? இதற்கு பின்னணியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளி யார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.