திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் வாணி தெருவில் வசிக்கும் பாலன் அவர்களது மகன் தீபன் சக்கரவர்த்தி, தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி சுதா பெரிய தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் தினமும் காலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு வீட்டின் சாவியை வாஷிங் மெஷின் கீழே வைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,
அதுபோல் இன்று காலை தீபன்சக்கரவர்த்தியும் அவரது மனைவி சுதாபிரியாவும் காலை சுமார் 10 மணி அளவில் வீட்டை பூட்டி அதன் சாவியை வாஷிங் மெஷின் அடியில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் பணி முடிந்து மாலை சுமார் 5 மணிக்கு திரும்ப வந்து வீட்டைப் பார்த்த போது வீட்டின் கதவை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 25 சவரன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாலுக்கா உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் போலீசார் திருடுபோன வீட்டினை சோதனையிட்டு திருடர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டின் கதவு சாவியை கொண்டு திறக்கப்பட்டு பீரோ மட்டும் உடைக்கப்பட்டுள்ளதால், தெரிந்தவர்கள் எவரேனும் இதை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை